Saturday, December 24, 2016

உள்ளம் என்னும் ஊடகம்

”சந்தவசந்தம்” என்னும் மரபுக் கவிதைத் தளத்தில் தற்போது 
நடைபெற்றுவரும்  ’மாதமொரு கவியரங்கம்’ நிகழ்ச்சியில் இட்ட கவிதை:


<> உள்ளம் என்னும் ஊடகம் <> 

(அறுசீர் விருத்தம்; அரையடி: மா மா காய்)      
                                                                                                                                                                                                                          
எங்கும் நிறைந்த இறைவன்எனை  இந்தப் புவியில் படைக்கையிலே
பொங்கும் கருணை நினைப்போடு புவியில் வாழ்க்கை நடத்துவதற்(கு)
அங்கம் பலவும் தந்தபின்னர் அவற்றின் மேலாய் எனக்குள்ளே
தங்கும் அருமை ஊடகமாய்த் தந்தான் உள்ளம் எனும்பரிசை.

உலகில் பற்பல ஊடகங்கள் உலவும் ஆயின் அவைவெளியே
நிலவும் செயற்கைச் சாதனங்கள், நேர்மா றாக என்பிறவிப்
பலனாய்ப் பெற்ற ஊடகமோ பரிவோ டென்னுள் உறைந்தவணம்
சிலபோ தேனும் ஓய்வின்றிச் செயலைப் புரியும் திறனுடன்,நான்

உறங்கும் போதும் தன்பணியை ஒழுங்காய் நிதமும் செய்கையில்நான்
கிறங்கிப் போவேன் ஒருசமயம் கிலியில் சிலிர்ப்பேன் மறுசமயம்
உறங்கி விழித்த மறுகணமே ஓடிப் போகும் சேதிகளும்
திறங்கள் இங்ஙன் பலகொண்ட  தனிஊ டகமாம் என்னுள்ளம்.

பறந்தும் திரிந்தும் வெளியுலகில் பலவாய்ச் செய்தி கொண்டுவரும் 
பிறஊ டகங்கள் தருவதைத்தான் பெற்றுப் பின்னர் தரம்பிரித்துப்
’பெறுவாய் இவற்றை’ எனஎனக்குள் பேசி என்னைச் செயல்படுத்தும் 
உறவாம் இந்த ஊடகம்போல் உள்ளோர் உலகில்  எவருளரே? 

பிறந்த நேரம் முதலாகப் பிரியா தென்னுள் இயங்குமிதைச்
சிறந்த நண்பன் எனமகிழ்ந்து சிந்தித் திருக்கும் வேளையிலே
பரந்த உலகில் நான்வாழப் படைத்தான் தன்னை எனுமுண்மை
மறந்தென் உள்ள ஊடகமே மாற்றான் எனமா றுவதுண்டு.

வெளியில் நடக்கும் நிகழ்வுகளை விருப்பம் போலத் தான்மாற்றி
ஒளியை இருளாய்க் காட்டியென்றன் உணர்வில் அச்சம் விளைத்துமுனம்
தெளிவாய் இருந்த சிந்தையிலே தீயை மூட்டி எரியவிட்(டு)என் 
களியை மாற்றிக் கவலையெனும் காட்டில் திரிய வைத்துவிடும். 

மரத்தை விட்டு மரம்தாவும் மந்தி யென்றும் கணந்தோறும்
நிறத்தை மாற்றும் ஓந்தியென்றும் நிலையில் லாமல் அலையுமொரு
வரத்தைப் பெற்ற  ஊடகமாய் வாய்த்தென் வாழ்வை ஆளுமொரு
தரத்தை உள்ளம் அடைந்ததனைத் தனியே அமர்ந்து சிந்தித்தேன்:

யாதுஇவ் உள்ளம்? அதன்செயலை அறியும் திறன்வே றொன்றாமோ?
பேதம் உண்டோ இவற்றிடையே? பிறந்த நாள்தொட் டிதுவரையில்
ஏதும் மாற்ற மில்லாமல் என்னுள் இயங்கி ’நான்’’நான்’என்(று)
ஓதும் உணர்வின் தன்மையென்ன? உயர்ந்தோர் உரைக்கும் விடையிதுவே:
  
”உள்ளம் என்ப(து) எண்ணங்கள் உருவாக் கியதோர் பிம்பம்*,அது
கள்ளத் தனமாய் நமைமயக்கிக் காட்டும் தானே ‘நான்’என்றே
உள்ளத் திற்கே ஒளிவழங்கும் உணர்வே ’நான்’ஆம் எனுமுண்மை
தெள்ளத் தெளிந்த ஞானியரைச் சிறிதும் உள்ளம் சீண்டாது.”

இந்த அறிவைப் பெறவேண்டி என்றன் உள்ளத் தெழுகின்ற
எந்த எண்ணச் சேர்க்கையிலும்  என்னை இழக்கா வகையினிலென்
சிந்தை தன்னைத் தனிப்படுத்தும் செயலை இனிநான் மேற்கொள்ள
அந்தம் இல்லா ஆண்டவனின்  அருளை வேண்டிக் காத்திருப்பேன்.



 (* ஒரு நாள் பொழுதில், ஆயிரக்கணக்கான எண்ணங்கள் நம் உள்ளத்தில் உலவிச் செல்கின்றன- சராசரி எண்: 70,000 -http://www.loni.usc.edu/about_loni/education/brain_trivia.php இந்த எண்ணங்களின்  (’செய்திகளின்’)கோவையையே உள்ளம்/மனது என்கிறோம்.)  


அனந்த் 18-12-2016

No comments: