Thursday, September 15, 2016

மனம் தளராதே!

                                <> மனம் தளராதே! <>

                              
                                            ..அனந்த்
           
            என்றும் மனம்தள ராதேகண்ணா!
            ...என்னால் வரும்தொல்லை எண்ணிஓ யாதே (என்றும்..) 
         
           
            கோடிப் பிறவியாய்ச் செய்த- பிழை
            ... கோபுரம் போலக் குமிந்தென்னை எய்த
            ஆடிநான் சாய்வதில் என்ன - பெரும்
            ...அதிசயம் ஆகையால் கீதையில் சொன்ன

            வார்த்தை நினைவினில் கொண்டு - உன்னை
            ... வந்தடைந் தால்நீயோ வாய்மூடிக் கொண்டு
            சோர்ந்து கிடக்கின்றாய் இன்று - நான்
            ... செய்திட்ட பாவத்தைக் கண்(டு)ஐயோ என்று

            அஞ்சி நடுங்கிட லாமோ? - நீயும்
            ... அற்ப மனிதர்போல் ஆகிடப் போமோ?
            கொஞ்சம் மனத்தினைத் தேற்று - என்றன்
            ... குறைகளை உன்னிரு காதினில் ஏற்று

            ஆனை முதலையும் கூட - முன்னம்
            ... ஆற்றிய பாவத்தைத் தூக்கிநீ போடப்
            போன கதைநெஞ்சில் எண்ணு - ஒரு
            ... போக்கற்ற என்மேல் தயவினைப் பண்ணு

            வாழ்வினில் துன்பத்தைக் கண்டு- உன்றன்
            ... வாசலில் நிற்பவர் கோடியாய் உண்டு
            தாழ்ந்துன்னைச் சார்ந்திடும் போது - அவர்
            ... தாபம்தீர்க் காவிடில் வந்திடும் வாது!

            போட்டி உனக்கெவ ருண்டு? - உன்றன்
            ...புகழை நிலைநாட்ட என்துணை கொண்டு 
            காட்டுஉன் வீரத்தை இன்று - நீ
            ... கடவுள்என் றால்என்னைக் காப்பாற்றல் நன்று! (என்றும்..)

                                                                                                               

    (திண்ணை மின்னிதழில் 2003-ல் வெளியானது)

No comments: